மாஜி மந்திரிகள் 13 பேருக்கு சிக்கல்
உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் ஊழல் வழக்குகள்!
ஊழல் புகார்கள் குவிகின்றன!
உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்கியப் புள்ளிகள், தி.மு.க. ஆட்சி வந்ததும் தங்கள் கம்பெனியைத் திறப்பார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தால், அப்படியே மூடிவிடுவார்களாம். இவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். எல்லாமே திருட்டு மின்சாரம் மூலம் வந்த பணம். எந்தெந்த வகையில் இந்த மின் திருட்டு நடந்தது, அதிகாரிகள் யார் யார் உடந்தை என்று, விரிவான தகவல்களுடன் வந்த கடிதம் ஒன்று, மின் வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி-யான ராதாகிருஷ்ணன் மேஜையில் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது!

'உள்துறை, மின் துறை, உணவு, விவசாயம், வருவாய், வீட்டு வசதி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தொழில் துறை, கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து என 13 துறைகளில் ஊழல் நடந்து உள்ளதா?’ என்று ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறுப்பை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிடம் ஒப்படைத்து இருக்கிறார் முதல்வர்.
முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்த ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் போன்ற துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் பிரிவை முடுக்கிவிட்டு, தகவல் சேகரிக்கச் சொல்லி இருக்கிறாராம்.
இதே போல், டெண்டர், கான்ட்ராக்ட்கள், அலைக்கழிப்பு, டார்ச்சர் போன்றவற்றை சந்தித்த தனியார் நிறுவனங்களைத் தேடிப் பிடித்து, முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களைப்பற்றி புகாராகக் கேட்டு வாங்கும் வேலையை, தனியார் கம்பெனி முதலாளிகள் சிண்டிகேட் ஒன்று கனகச்சிதமாகச் செய்து வருகிறதாம். 'பல்வேறு சேனல்களில் கிடைக்கும் ஆதாரங்களை வைத்து, பொது நல வழக்கு போட்டு நீதிமன்றம் மூலமே டைரக்ஷன் வாங்கி, சி.பி.சி.ஐ.டி. பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஊழல் விசாரணை துரிதப்படுத்தலாமா?’ என்கிற கோணத்திலும் சட்ட ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன.
ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதைப்போல, 'தி.மு.க. மந்திரிகளின் ஊழல் புகார்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்ற ரீதியில் சமூக ஆர்வலர்கள் யாராவது நீதிமன்றப் படி ஏறவும் வாய்ப்புகள் உண்டு.
தகவல் சேகரிப்பு சேனல்கள் எவை?
13 துறைகளை நிர்வகித்த மந்திரிகள், அந்தத் துறைகளின் உயர் அதிகாரிகள் என இரண்டு தரப்பினரின் பி.ஏ-க்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், வீட்டு வேலையாட்கள் யார் யார் என்ற பட்டியலை, ரகசியமாகச் சேகரித்துவிட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளுக்கு நிர்வாகத்தில் உதவ அரசு நியமித்த பி.ஏ-க்கள் ஓரிருவர். ஆனால், வசூல் வேட்டை, பேரம் பேசுவது, அதிகார மிரட்டல் போன்ற 'நம்பர் 2’ விவகாரங்களை கவனிப்பதற்கு என்றே பொலிட்டிக்கல் பி.ஏ-க்கள் என்கிற பெயரில் பலர் இருந்திருக்கார்கள். 15 பி.ஏ-க்களை வைத்துக்கொண்ட அமைச்சர்களும் உண்டாம். மந்திரியை நன்றாகக் குளிர்வித்து தனது பைக்குள் வைத்துக்கொண்ட பொலிடிக்கல் பி.ஏ-வுக்கு மற்ற அனைவரும் அடிமைகள். இந்த வகையில், தினப்படி அலுவலக வேலைகளை மூச்சுத் திணறச் செய்ததோடு, மற்றவர்களின் அவமானங்கள், அவதூறுகளைச் சந்தித்து நொந்துபோன அரசு தரப்பு பி.ஏ-க்கள் சிலர், 'ஏ டு இசட்’ விஷயங்களை வெளியில் சொல்லத் தயாராகிவிட்டார்கள். இந்த ரீதியிலும் தகவல் சேகரிப்பு நடக்கிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய கேப்டன் யார்?
சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனர் பதவியில் சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பாலகிருஷ்ணன் இருக்கிறார். அவர் மேற்பார்வையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் செயல்படுவார். இந்தப் பதவியில் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். இப்போது அந்த இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. ஆரம்பத்தில் ஷியாம் சுந்தரை நியமித்துவிட்டு, திடீரென அவரை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். இதே பிரிவில், எஸ்.ஐ.யூ. என்று அழைக்கப்படும் சிறப்பு விசாரணைக் குழு செயல்படுகிறது. அரசியல் தலைவர்களின் ஊழல்களை மட்டுமே இந்தக் குழு விசாரிக்கும். பெங்களூருவில் நடக்கும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கண்ணப்பன், நத்தம் விசுவநாதன் போன்ற சிலர் மீதான வழக்குகளை இந்தக் குழுதான் கவனித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இந்தக் குழுவின் தலைவராக இருந்தவர், கூடுதல் டி.ஜி.பி-யான துக்கையாண்டி. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், அவரைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் ஐ.ஜி-யான குணசீலன், எஸ்.பி. அந்தஸ்தில் வெங்கடேஸ்வரன் இருவரையும் நியமித்து இருக்கிறார்கள். இருவரும் தங்களுக்குத் தரப்பட உள்ள அசைன்மென்ட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு இயக்குநர் பதவியில் முதலில் யாரையாவது நியமித்தால்தான், இவர்களது அதிரடி வேலைகள் துவங்கும்!
சி.பி.சி.ஐ.டி-யிலும் மாற்றம்?
கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. பிரிவின் தலைமை அலுவலகம் இன்னமும் சுறுசுறுப்பு அடையவில்லை. தற்போது இங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுவதால், புதியவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது இந்தப் பிரிவு. தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிய அப்போதைய பொதுப் பணித் துறை செயலாளர் ராமசுந்தரத்தின் மனைவி இவர். தமிழகக் காவல் துறையில் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். ஆனால், அவரது கணவரோ... தலைமைச் செயலகக் கட்டட வேலை முடிந்ததும், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் முழு கவனமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விழுங்கிய இந்தக் கட்டட ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாகவே இருக்கிறது. சில சந்தேகங்களின் அடிப்படையில் ஏதாவது விசாரணை வரும்பட்சத்தில், ராமசுந்தரத்திடமும் விளக்கம் கேட்கப்படலாம். அந்த நேரத்தில், சி.பி.சி.ஐ.டி-யின் தலைமைப் பதவியில் அர்ச்சனா இருந்தால், தர்மசங்கடம் ஏற்படும். அதைத் தவிர்க்கவே, முன்கூட்டியே அர்ச்சனா வேறு பதவிக்கு மாற்றப்படலாம்!
- ஜூ.வி. கிரைம் டீம்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment