Friday, June 3, 2011

விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!


விலைவாசியை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!
சென்னை, ஜூன் 3,2011
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில், 'விலை கட்டுப்பாட்டு நிதி'யை உருவாக்கி, புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் வெளியான அறிவிப்பு:
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்க இந்த அரசு எடுத்துவரும் உறுதியான முயற்சிகளுக்கு இது ஓர் உதாரணமாகும்.
பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப உத்திகள் புகுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் பராமரிப்பு, பொருட்களின் நகர்வு, அத்தியாவசியப் பொருட்களின் ஒதுக்கீடு, விநியோகங்கள் போன்றவற்றைக் கண்காணித்தல், கடத்தலைத் தடுத்தல் ஆகிய பணிகளை இந்த அரசு செவ்வனே செய்யும்.
விலைவாசியைக கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்துவதுடன் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு
கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.
ரூபாய் 50 கோடி ஒதுக்கீட்டில் 'விலை கட்டுப்பாட்டு நிதி' உடனடியாக ஏற்படுத்தப்பட்டு வட்டியில்லாக் கடனாக கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கி அத்தியாவசியப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அத்தகைய பொருட்களை உற்பத்தி மையங்களில் நேரடியாக வாங்கி அடக்க விலையிலேயே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.
நீண்டகாலத் திட்டமாக உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்து அதன் மூலம் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையே உள்ள
இடைவெளியை நீக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment